Wednesday, 1 January 2014

 

 நீல சாயம் வெளுத்துப் போச்சு ! 

 

தனக்கான ஒருவனைத் தேடித் தேடித்  தனிமையில் தவிக்கும் இதயம் போலவே இருந்தது என்  நிலைyuyuயும். நீண்ட கால தேடல், எண்ணிலடங்கா ஏமாற்றங்கள், கஜினி முகமதை விட எண்ணற்ற முயற்சிகள்,  இருப்பினும் எஞ்சியது எனக்குத் தோல்விகள் மட்டுமே.


வழக்கமான என் தேடல் தொடங்கிய ஒரு நாள் ஒரு குறுந்தகவல் வந்தது. "உன் கூட லாங் டிரைவ் போக ஆச படுறேன், உனக்கு ஓகே வா" ? வித்தியாசமான  அந்தக் கேள்வியின் சுவாரஸ்யம் என்னைப் பெரிதும் ஈர்த்தது. 

பெயர்? ஊர்? தொலைபேசி எண்? இடம் இருக்கிறதா? உன் படுக்கை விருப்பம் என்ன? யாரோடு இருக்கிறாய்? என்ற பாட்டி கால ஊறுகாய் கேள்விகளால் துவண்டு போன என் எண்ணத்தில் புதிதாய் ஒரு ஜீவ நதி சுரக்கத் தொடங்கியது.
பைக்கில் 70 முதல் 80 வரையிலான வேகத்தில் யாருமில்லாத ஒரு நெடுஞ்சாலையில் என்னவனை இறுகக் கட்டிக்கொண்டு செல்ல வேண்டும் என்பது என்னுடைய காதல் கனவுகளில் ஒன்று.

யோசிக்க ஒரு நொடியும் எடுத்துக்கொள்ளாமல் சம்மதம் தெரிவித்தேன்.  வாரத்தின் முதல் நாள் தொடங்கிய பேச்சுவார்த்தையின் காரணத்தால், என் கனவு வாரத்தின் இறுதி நாளில் நிறைவேற்றப்படுவதாக உறுதி அளிக்கப்பட்டது.

ஒரு வார காலம் இயல்பாக நட்பாகப் பேசிப் பழகினோம். எதிர்பார்த்த அந்த நாளும் வந்தது. காலை 5.30 மணிக்கு என் கைப்பேசிக்கு அழைப்பு வந்தது. நான் வேலூர்ல ஷூட்டிங்ல இருக்கேன், உன்னால இங்க 10 மணிக்கு வர முடியுமா?  11 மணிக்கு மேல எனக்கு வேற எந்த வேலையும் இல்லை, நைட் வரைக்கும் நீ என் கூட இரு ராத்திரி  வீட்டுக்கு போய்டலாம் என்றான்.

ஞாயிற்றுக்கிழமைகளில் 10 மணிக்கு முன்பாக எழுந்திராத நான், அவன் சொல்லி முடித்த அடுத்த நிமிடமே எழுந்து தாயாரானேன். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அவன் சொன்ன பேருந்தில் ஏறி வேலூர் சென்று அவனது கைப்பேசி எண்ணை அழைத்தேன், ஆனால் அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

ரை மணி நேரக் காத்திருப்புக்கு பின் அவனே என்னை அழைத்தான். "சாரி டா குட்டி,  நேத்து நைட் முழுக்க ஷூட்டிங், காலைல ரூம்க்கு வந்ததும் உனக்கு போன் பண்ணேன், அப்படியே தூங்கிட்டேன். இவ்வளவு நேரம் உன் போன் வந்தது கூட தெரியல, அவ்ளோ டயர்ட், சரி நீ பஸ் ஸ்டாண்ட் வந்துட்டியா? ம்ம் சரியா பத்து நிமிஷத்துல நான் அங்க இருப்பேன் என்றான்.

ரை மணி நேரமாகியும் அவன் வரவில்லை. மீண்டும் மீண்டும் அவன் கைப்பேசியை அழைத்தும் பதில் ஏதும் இல்லை அவசரப்பட்டு விட்டேனோ என்ற எண்ணம் என்னை உள்ளூர ஏளனம் செய்தது. என்னை நானே திட்டிக்கொண்டிருந்த நேரம் ஒரு கை என்னைத் தொட்டது. அது வேறு யாருமல்ல, யாரைத் தேடி இதனை தூரம் வந்தேனோ அவன் தான். என்னை தொட்டு வண்டியில் ஏறு என்று சொல்லி பேருந்து நிலையத்தை தாண்டி ஒரு தேசிய நெடுஞ்சாலையில் நுழைந்தான், என்னையும் அவனையும் தவிற வேறு யாருமே இல்லாமல் வெறிச்சோடிய ஒரு அநாதைச் சாலையாக அது இருந்தது. வண்டியின் வேகம் மெல்ல மெல்ல  50, 60, 70 , எனத் தொடர்ந்து  80 கிலோமீட்டர் வரை சென்று நிலை கொண்டது.

என்னையும் மறந்து அந்த வேகத்தில் அவனை இறுகப் பற்றிக்கொண்டேன். அளவில்லாத ஆனந்தத்தினாலும் அவன் ஒட்டிக் சென்ற வேகத்தினால் பலமாக வீசிய எதிர் திசை காற்றாலும் என் கண்கள் நீரை வார்த்தது. 20 நிமிட பயணத்திற்கு பிறகு ஒரு காபீ டே-வில் நின்ற போது தான் நான் என்னை உணர்ந்தேன்.

எத்தனை அன்பான உபசரிப்பு, வயிறு முதல் கழுத்து வரை என்னை உணவுகளாலும் இதயத்தை உற்சாகத்தினாலும் நிரப்பினான். அத்தனை பெரிய கடையின் பரப்பளவில் பணியாளர்களைத் தவி நாங்கள் இருவர் மட்டுமே.

மிகவும் அதிகமாக குளிரூட்டப்பட்டிருந்த அங்கே குளிர்ந்த பானங்களை அருந்தியிருந்த  நான் உறையத் தொடங்கினேன். என் கைகள் உதறுவதையும் இதழ்கள் உளறுவதையும் புரிந்து கொண்ட அவன் என்னை நெருங்கி வந்து அவன் கைகளை என் தோள்களைச் சுற்றி என்னை தன்னோடு நெருக்கமாய் அணைத்துக் கொண்டான்.

இப்போ மட்டும் இல்ல என்னைக்கும் எப்பவும் உன்னை பத்திரமா பாத்துப்பேன், நீ மட்டும் எனக்கு சொந்தமாயிட்டா என்றான். 

காதலும் வாழ்கையும் உறவும் முறையும் சமூகமும் சம்ப்ரதாயங்களும் எதிர்காலமும் எதிர்பார்ப்புகளும் சார்ந்த பல விஷயங்களை பேசி ஒரு முடிவுக்கு வந்தோம்,  பரஸ்பர சம்மதம் பரிமாறிக் கொண்டோம்

இன்னைக்கு நைட் ஷூட்டிங்க்கு என்கூட வர்றியா?” என்று மிகுந்த ஆவலோடும் எதிர்பார்ப்போடும் கேட்டான். ராத்திரிக்குள்ள நான் வீட்டுக்கு போயாகணும், என்னால முடியாது, இன்னொரு நாள் வேணும்னா பாக்கலாம் என்றேன். என் மறுப்பினால் ஏமாற்றம் அடைந்தவனின் முகம் சுருங்கி போவதை நான் உணர்ந்தேன், இருப்பினும் என்னை அவனோடு இருக்கச் செய்வதில் அவன் தீவிரமாய் இருந்தததை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது

என்கூட இன்னைக்கு நைட் ஷூட்டிங்க்கு வா, நாளைக்கு நாம கொடைக்கானல் போலாம், மூணு நாள் டூர் அடிப்போம், திரும்ப அங்க இருந்து நேரா சென்னை போய்டலாம் என்றான். இல்ல வேண்டாம், ப்ளீஸ் என்ன கம்ப்பல்  பண்ணாதடா நான் நைட்டே வீட்டுக்கு போறேன், அடுத்த மாசம் வேணும்னா நாம போலாம், அடுத்த வாரம் நீ சென்னை வந்ததும் மீட் பண்ணி இத பத்தி பேசி ஒரு முடிவு பண்ணலாம்.என்று நான் சொல்லி முடிப்பதற்குள் அவன் கோபத்தோடு எழுந்து வாசலை நோக்கி வேகமாய் நடந்தான்.

வாசலில் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்து அவன்  எதையோ மிகவும் அழுத்தமாய் யோசித்துக் கொண்டிருந்தான். அவன் முகம் முன்பை விட அதிகமாய் வாடி இருந்ததை கண்டதும் என் மனம் அளவில்லாத வருத்தம் கொண்டது. வேறு வழியில்லாமல் சம்மதிக்க நிர்ப்பந்திக்கப்பட்டேன் நான்.  சரி இன்னைக்கு உன் கூட ஷூடிங்க்கு மட்டும் நாளைக்கு காலைல என்னை பஸ் ஏத்தி விட்னும்,  இதுக்கு ஓகேன்னா வரேன், இல்லன்னா என்ன இப்பவே பஸ் ஸ்டாண்ட்ல இறக்கி விட்ரு" என்று நான் சொன்னதும் அவன் முகம் பிரகாசமாய் மலர்ந்தது

ஷூட்டிங் ஜெயில்ல நடக்குது அங்க ஜுவல்ஸ் போன் எல்லாம் எடுத்துட்டு போக முடியாது. அதனால உன் பேக்ல எல்லாத்தையும் வெச்சிரு. என் ரூம்ல கொண்டு வெச்சுட்டு வந்து உன்னை கூட்டிட்டு போறேன். உன்னையும் ரூம்க்கு கூட்டிட்டு போலாம். ஆனா ரூம்மேட்ஸ் இருப்பாங்க.  அவங்களுக்கு என்ன பத்தி எல்லாமே தெரியும். உன்னை யாரு என்னன்னு கேள்வி கேட்டு உன்ன தொல்ல பண்ணுவானுங்க. உன்னையும் என்னையும் வெச்சு கிண்டல் பண்ணுவானுங்க. உனக்கு சங்கடமா இருக்கும். எனக்கு உடனே கோவம் வரும். அடுத்தது தேவை இல்லாம சண்ட வரும். அதனால நீ இங்கயே வெயிட் பண்ணு. நான் ரூம்ல பேக் வெச்சிட்டு உடனே வந்துடறேன். அப்புறம் நாம ஷூட்டிங் ஸ்பாட் போகலாம்”””

கட்டத் தொடங்கிய கனவுக் கோட்டையின் அஸ்திவாரத்தில் இடி வந்து விழுந்தது போல் இருந்தது அவனிடம் இருந்து வெளிப்பட்ட வார்த்தைகள்.

அவன் சொல்லிகொண்டிருக்கும் எந்த காரணமும் சமாதானமும் என் காதுகளில் நுழையவேயில்லை. அவன் விடாமல் பேசிக் கொண்டே இருந்தான் ஒரு நொடி அவனை நிறுத்தி

நான் ஒண்ணு கேட்பேன் செய்வியா?”  

என்ன  சொல்லு, உனக்காக நான் எது வேணும்னாலும் செய்றேன்

என்ன மறுபடி பஸ் ஸ்டாண்ட்ல கொண்டு விடுறியா? இப்பவே

 நான் கேட்ட அந்த ஒரு  கேள்வியால் முழுவதுமாக நிலை குலைந்து போனான்.

உண்மையில் நிலை குலைந்து போயிருந்தவன் நான் தான் அங்கே.  அவனது பேசும் செயலும் என்னை மேலும் மேலும் குழப்பியது. அவன் செய்ய வேண்டியதாய் சொன்ன எந்த காரணமும் எனக்கு சரியென தோன்றவில்லை. ஏதோ பெரிய தவறு நடக்கப் போகிறது என்ற உள்ளுணர்வு எனக்குள் பலமாக தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருந்தது.

இயல்பு நிலைக்கு எதிர்மறையாகவும் என் மீது கோபமாய் இருந்தும் அதை வெளிக்கட்டமலும் என்னிடம் எந்த பதிலையும் சொல்லாமல், ஒரு வார்த்தை கூட பேசாமல் என்னை அழைத்துக் கொண்டு பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டான். பேருந்தில் ஏறி ஜன்னல் அருகே அமர்ந்த என்னை கீழிருந்து பார்த்துக் கொண்டே இருந்தான். பேருந்து புறப்படும் நேரத்தில் பார்த்து பத்திரமா போ என்று சொல்லி தன் பைக்கை ஸ்டார்ட் செய்து எதிர் திசையில் மின்னலாய் சென்று மறைந்தான்.

( இது ஒரு உண்மைச் சம்பவம் )


Tuesday, 31 December 2013

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !


              நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இன்று பிறந்திருக்கும் புதிய வருடம் உங்களுக்கு எல்லா நலன்களையும் வளங்களையும் வாரி வழங்கிட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.


என்றும் அன்புடன்,


டேனியல் சதீஷ் 

சொல்லத்தான் நினைக்கிறேன் !




 சொல்லத்தான் நினைக்கிறேன் !




  பல ஆண்டுகளாய் என் மனதுக்குள்ளேயே வைத்திருந்த என் வாழ்க்கையின் பல சுவையான மற்றும் கசப்பான அனுபவங்களை உங்களிடம் மனம் திறந்து பகிர்ந்துகொள்கிறேன் !